
ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மறுப்பு
செய்தி முன்னோட்டம்
கர்நாடகாவில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மறுத்துள்ளார். அலந்த் சட்டமன்றத் தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் விரிவான பதிலை அளித்துள்ளார். அதிகாரபூர்வ அறிக்கையின்படி, வாக்காளர் நீக்கத்திற்கான 6,018 ஆன்லைன் விண்ணப்பங்கள் 2022 இறுதி மற்றும் 2023 தொடக்கத்தில் முழுமையாக விசாரிக்கப்பட்டன. இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்ததால், வீடு வீடாக சென்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், 6,018 விண்ணப்பங்களில் 24 மட்டுமே உண்மையானவை என்றும், மீதமுள்ள 5,994 விண்ணப்பங்கள் தவறானவை என்பதால் அவை நிராகரிக்கப்பட்டு, எந்தவொரு அங்கீகரிக்கப்படாத நீக்கமும் நடைபெறவில்லை என்றும் கண்டறியப்பட்டது.
புகார்
காவல் துறையில் புகார்
இந்த கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு, தேர்தல் அதிகாரிகள் பிப்ரவரி 2023 இல் காவல்துறையில் புகார் அளித்தனர். ராகுல் காந்தி தற்போது கர்நாடக சிஐடி விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஏற்கனவே இந்த வழக்கு குறித்து அனைத்து தகவல்களும், விண்ணப்ப விவரங்கள், மொபைல் எண்கள் மற்றும் ஐபி முகவரிகள் உட்பட, செப்டம்பர் 2023 இல் கலபுரகி காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி உறுதிப்படுத்தினார். இந்த பதில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடி மறுப்பாக அமைந்துள்ளது. இதற்கிடையே, பீகாரைத் தொடர்ந்து டெல்லியிலும் SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.