
மனைவி மீதான அவதூறு பிரச்சாரம்; அமெரிக்காவிலேயே வழக்கு தொடர பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் முடிவு
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் மக்ரோன், அமெரிக்க வலதுசாரி அரசியல் விமர்சகர் கேன்டேஸ் ஓவன்ஸ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். பிரிஜிட் ஒரு ஆணாகப் பிறந்தவர் என்று ஓவன்ஸ் கூறியதால், அதை மறுக்கும் வகையில் அறிவியல் ஆவணங்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இந்த தம்பதி முடிவு செய்துள்ளனர். ஓவன்ஸை தொடர்பு கொண்டு ஒரு வருடமாக இந்த பொய்யான குற்றச்சாட்டை நிறுத்தும்படி கோரியும் அவர் அதை கேலி செய்ததால், வழக்கு தொடுப்பதே கடைசி வழி என்று தம்பதியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலேயே இந்த வழக்கை தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மன உளைச்சல்
பிரிஜிட் மக்ரோனுக்கு கடும் மன உளைச்சல்
பிபிசியின் ஒரு நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த மக்ரோனின் வழக்கறிஞர், இந்த தவறான குற்றச்சாட்டுகள் பிரிஜிட் மக்ரோனுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதிபரின் கவனத்தை திசை திருப்புவதாகவும் கூறினார். இந்த அவதூறு பிரச்சாரத்தை கேன்டேஸ் ஓவன்ஸ் தனது மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களிடம் பரப்பியது வழக்கில் முக்கிய அம்சமாக உள்ளது. பிரிஜிட் மக்ரோன் தனது பாலினம் குறித்த வதந்திகளை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, பிரான்ஸில் இதேபோன்ற தவறான குற்றச்சாட்டுகளை இணையத்தில் பரப்பிய இரண்டு பெண்களுக்கு எதிராக அவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றார். இந்த புதிய வழக்கை பற்றி பேசிய ஓவன்ஸ், இது ஒரு தற்காப்புக்கான பொதுத் தொடர்பு உத்தி என்று விமர்சித்துள்ளார்.