
ரேஷன் கடைகளில் யுபிஐ சேவை: மொபைல் முத்தம்மா திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய நடைமுறைக்கு மொபைல் முத்தம்மா எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் குடும்ப அட்டைகளுக்குப் பிறகு, ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பது, வாடிக்கையாளர்களுக்கு வசதியை அதிகரிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. தற்போது, 2.26 கோடி குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தி சுமார் 34,808 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் பெரும்பாலும் ரொக்கப் பரிவர்த்தனைகளே நடைபெற்று வந்தன. இதனால் சில்லறைப் பிரச்சினை மற்றும் கணக்கு வழக்கு சிக்கல்கள் அடிக்கடி ஏற்பட்டன.
சோதனை
சோதனை அடிப்படையில் சென்னையில் தொடக்கம்
இந்த குறைகளைத் தீர்க்கும் வகையில், சென்னையில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட மொபைல் முத்தம்மா திட்டம், தற்போது தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள் தங்களின் கூகுள் பே, ஃபோன்பே அல்லது பேடிஎம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி ரேஷன் கடைகளில் உள்ள கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்து பொருட்களை வாங்கலாம். இதன் மூலம், ரொக்கப் பரிவர்த்தனைகள் தவிர்க்கப்படுவதுடன், சில்லறைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். மேலும், பணம் நேரடியாக அரசின் வங்கிக் கணக்கிற்குச் செல்வதால், நிதி முறைகேடுகளும் தடுக்கப்படும். ஆரம்பத்தில் இந்த யுபிஐ சேவை ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ரேஷன் கடைகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.