அத்திப்பள்ளி பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றம்- கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல்
தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நிகழ்ந்த பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட இருப்பதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். நேற்று மாலை, அத்திப்பள்ளியில் உள்ள ஒரு பட்டாசு கடைக்கு கண்டெய்னர் லாரியில் இருந்து பட்டாசுகளை இறக்கிய போது வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ₹3 இலட்சம் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவந்தனர். தற்போது இந்த வழக்கை சிஐடிக்கு மாற்ற இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.