கர்நாடகா: தேர்வுகளின் போது ஹிஜாப் போன்ற முக்காடுகள் அணியத் தடை
கர்நாடகா: ப்ளூடூத் சாதனங்களைப் பயன்படுத்தி ஏமாற்றுதல் போன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் ஆட்சேர்ப்புத் தேர்வுகளின் போது எந்த வகையான தலைக்கவசங்களையும் அணியக்கூடாது என்று கர்நாடக தேர்வு ஆணையம்(KEA) அறிவித்துள்ளது. எனினும், வலதுசாரி அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து திருமணமான இந்து பெண்கள் அணியும் தாலிகள் மற்றும் மெட்டிகளுக்கு மட்டும் கர்நாடக தேர்வு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தேர்வு அறைக்குள் இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப்புகள் அனுமதிக்கப்படாது என்று கர்நாடக தேர்வு ஆணையம் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், இனி ஹிஜாப் அணிந்திருப்பவர்கள் தேர்வு அறைக்குள் நுழைய முடியாது. நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு வாரிய தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தலை, வாய் அல்லது காதுகளை மறைக்கும் எதையும் அணியக்கூடாது
"தலை, வாய் அல்லது காதுகளை மறைக்கும் ஆடை அல்லது தொப்பியை" அணிந்திருப்பவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று KEA தெரிவித்துள்ளது. ப்ளூடூத் கருவிகளைப் பயன்படுத்தி ஏமாற்றுதல் போன்ற தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியே இது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஹிஜாப் அணியும் பெண்கள், தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அப்படி வரும் பெண்கள் சோதனை செய்யப்பட்ட பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனையால் இதற்கு முன்பு ஒரு பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவும் ஹிஜாப் பிரச்சனைகளும்
ஜனவரி 2022இல் உடுப்பியில் உள்ள ஒரு அரசு கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்த 6 பெண்கள் நுழையக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கல்லூரியின் அந்த தடையை கண்டித்து மாணவிகள் கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, உடுப்பியில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் காவி துண்டுகளை அணிந்து வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினர். இந்த போராட்டம் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவி, கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. மேலும், காங்கிரஸ் தலைவரான சித்தராமையா கர்நாடகாவின் முதல்வராக சில மாதங்களுக்கு முன் பதவியேற்ற போது, ஹிஜாப் பிரச்சனை போன்ற வெறுப்பு அரசியலுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அச்சச்சூழல் ஒழிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், ஹிஜாப் அணிய கர்நாடக தேர்வு ஆணையம் தடை விதித்துள்ளது.