Loading...
640 ஆண்டுகள் பழமையான தர்கா! காஞ்சிபுரத்தில் விமரிசையாக நடந்த சந்தனக்கூடு உற்சவம்; திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்
காஞ்சிபுரம் ஹஜ்ரத் தர்கா சந்தனக்கூடு உரூஸ் விழா

640 ஆண்டுகள் பழமையான தர்கா! காஞ்சிபுரத்தில் விமரிசையாக நடந்த சந்தனக்கூடு உற்சவம்; திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 01, 2026
10:34 am

செய்தி முன்னோட்டம்

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஹஜ்ரத் சையத் ஹாஜ் ஹமீது அவுலியா பாதுஷா தர்காவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சந்தனக்கூடு உரூஸ் உற்சவ விழா மிகவும் கோலாகலமாகவும் சிறப்புடனும் நடைபெற்று முடிந்தது. கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி புனிதக் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், தினமும் மாலை தர்கா வளாகத்தில் சிறப்பு திருக்குர்ஆன் ஓதுதல், சிறப்புத் தொழுகைகள் மற்றும் மத நல்லிணக்க ஆன்மீக சொற்பொழிவுகள் எனப் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. கூடுதல் விபரங்கள் இங்கே:-

சந்தனக் காப்பு

640 ஆண்டுகள் பழமையான ஞானியின் சமாதிக்கு சந்தனக் காப்பு

சுமார் 640 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் சமாதியடைந்து, இன்று வரை சாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களாலும் வணங்கப்படும் புனித ஞானியின் சமாதிக்கு சிறப்பு வண்ண வாசனை மலர்கள் தூவப்பட்டு, நறுமணம் மிக்க சந்தனம் பூசப்பட்டுப் பிரம்மாண்ட அலங்காரம் செய்யப்பட்டது.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சந்தனக்கூடு பவனி மற்றும் சந்தனம் பூசும் வைபவம் நேற்றைய தினம் தர்கா வளாகத்தில் மிகுந்த ஆன்மீக சூழலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பக்தர்கள் பங்கேற்பு

திரளான பக்தர்கள் பங்கேற்பும் தர்கா நிர்வாக அமைப்பும்

இந்த புனித சந்தனக்கூடு விழாவில் காஞ்சிபுரம் நகரம் மட்டுமன்றி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் இஸ்லாமியப் பெரியோர்கள் கலந்துகொண்டு தர்காவில் வழிபாடு நடத்தினர்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்புத் தபர்ருக் (பிரசாதம்) வழங்கப்பட்டது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தர்காவின் தர்மகர்த்தா எம்.முகம்மது இம்தியாஸ் மற்றும் தர்கா நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் இணைந்து சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இந்த ஹஜ்ரத் தர்கா, நூற்றாண்டுகளாக மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்ற இந்த தர்காவிற்கு தினசரி வருகை தருகின்றனர்.

ADVERTISEMENT