Loading...
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய எதிர்க்கட்சிகள் போர்க்கொடி; சிபிஐ விசாரணை கோரும் இபிஎஸ்
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய எதிர்க்கட்சிகள் போர்க்கொடி; சிபிஐ விசாரணை கோரும் இபிஎஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 24, 2026
11:43 am

செய்தி முன்னோட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றதாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA அருள் விக்னேஷ் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் தவெக அரசையும், முதலமைச்சர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை மற்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மு.க. ஸ்டாலின்

ஆளுங்கட்சி அரசை மறைக்க முயற்சித்ததாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல வாரங்களுக்கு முன்பே இத்தகைய சம்பவம் குறித்த செய்திகள் வெளியானபோதே முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி அவருக்குத் தைரியம் அளித்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தனது கட்சி சட்டமன்ற உறுப்பினரையும், மைனாரிட்டி அரசையும் காப்பாற்றும் நோக்கில் இந்த சம்பவத்தை மறைக்க அரசு முயற்சித்ததாலேயே பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி புகார் அளிக்க இவ்வளவு நாட்கள் ஆகியிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நீதிமன்றத்திலும் அரசு தரப்பில் பொய் சொல்லப்பட்டதைக் கண்டித்துள்ள ஸ்டாலின், இனியும் தாமதிக்காமல் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

சிபிஐ விசாரணை கோரிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட பெண் ஆட்சியருக்கே பணிச் சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு எனக் குறிப்பிட்டுள்ளார்.

தங்களை காப்பாற்ற அரசும் முதலமைச்சரும் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில்தான் ஆளுங்கட்சி எம்எல்ஏ இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்றத்திலேயே புகார் வரவில்லை எனக் கூறி வழக்கை மூடிமறைக்க முயன்றதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்த அரசின் மீது நம்பிக்கை முழுமையாகப் போய்விட்டதால், கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை உடனடியாக கைது செய்வதோடு, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

அண்ணாமலை

அரசியல் தலையீடின்றி விசாரணை நடத்த அண்ணாமலை கோரிக்கை

வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டிருப்பது தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று என அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளும் ஊடகங்களில் வெளியான தகவல்களும் மிகுந்த கவனத்துடன் விசாரிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள அவர், எவ்வித அரசியல் தலையீடுமின்றி வெளிப்படையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும் என எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT

தமிழிசை சௌந்தரராஜன்

அரசியலில் இருக்கத் தகுதியற்றவர் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளப் பதிவில், முன்னதாக குற்றச்சாட்டில் உண்மையில்லை எனக் கூறிய சட்டமன்ற உறுப்பினரும், அவருக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் ஆகியோரும் தற்போது ஆட்சியர் புகார் அளித்துள்ள நிலையில் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களைப் பாதுகாப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அருள் விக்னேஷ் அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர் ஆவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT