கலைஞர் நூற்றாண்டு பிரம்மாண்ட நூலகத்தின் சிறப்பம்சங்கள்
மதுரை மாவட்டம் புது நத்தம் பகுதியில் ரூ.215 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இ கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த நூலகம் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில், இதனை கட்டும் பணியானது கடந்தாண்டு தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது முடிந்துள்ள நிலையில், கீழ் தளத்தில் 100 கார்கள், 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலான வசதிகளுடன்கூடிய பார்க்கிங் வசதியுடன் இந்த பிரம்மாண்ட நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், உள்ளிட்டவை உள்ளது. இந்த நூலகத்தின் நுழைவு பகுதியில் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில், மின்தூக்கி, எஸ்கலேட்டர் உள்ளிட்ட வசதிகளும் இந்த நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.60 கோடி செலவில் பலத்துறைகளை சார்ந்த 2.5 லட்ச புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது
நூலகத்தின் 4ம் தளத்தில் மாடித்தோட்டம் அமைத்து அங்கு அமர்ந்து புத்தகம் படிக்கக்கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய உலகத்தரம் வாய்ந்த நூலகத்தினை இன்று(ஜூலை.,15)மாலை மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கிறார். 2.61 ஏக்கரில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுரடியில் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் ரூ.18 கோடி ரூபாய் செலவில் புத்தகம் வைக்கும் அலமாரிகள், நாற்காலிகள், மேஜைகள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளது, ரூ.5 கோடி செலவில் கணினிகள் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ரூ.60 கோடி செலவில் பலத்துறைகளை சார்ந்த 2.5 லட்ச புத்தகங்கள் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை. இத்தகைய சிறப்புவாய்ந்த பிரம்மாண்ட நூலகமானது 8 தளங்கள் கொண்டு கட்டப்பட்டுள்ள நிலையில், டிஜிட்டல் திரைகள், சிற்றுண்டிக்கூடங்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.