'உலகின் மிக முக்கியமான நாடு இந்தியா தான்': அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
'உலகின் மிக முக்கியமான நாடு இந்தியா தான்' என்று அதிபர் ஜோ பைடன் தன்னிடம் கூறியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தொழில்நுட்பம், வர்த்தகம், சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பு இருந்து வருவதாக கார்செட்டி கூறியுள்ளார். விண்வெளித் துறையில் இரு நாடுகளும் இணைந்து ஒத்துழைத்து வருவதாக கூறிய அவர், "வானம் கூட எங்களுக்கு எல்லை இல்லை. அமெரிக்காவும் இந்தியாவும் உலகின் மிக சக்தி வாய்ந்த இரண்டு நாடுகள்" என்று தெரிவித்துள்ளார். இந்தியாஸ்போரா ஜி20 மன்றத்தில் முக்கிய உரையாற்றிய போது பேசிய கார்செட்டி, இந்த தகவல்களை தெரிவித்தார்.
அடுத்த மாதம் இந்தியா வர இருக்கும் அதிபர் ஜோ பைடன்
"என்னை இந்தியாவில் பணியமர்த்தும் போது, அதிபர் ஜோ பைடன் என்னிடம் பேசினார். அப்போது அவர், 'என்னை பொறுத்தவரை உலகின் மிக முக்கியமான நாடு இந்தியா தான்' என்று கூறினார். மேலும், அவர் வரலாற்றில் எந்த அமெரிக்க அதிபரும் கூறாத ஒன்றை நான் கூறுகிறேன் என்றும் அமெரிக்காவில் வரி செலுத்துபவர்களில் ஆறு சதவீதம் பேர் அமெரிக்க-இந்தியர்கள் என்றும் என்னிடம் தெரிவித்தார்." என்று அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தனது உரையில் கூறியுள்ளார். அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ள உள்ள நிலையில், எரிக் கார்செட்டி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.