மத்தியப் பிரதேச காங்கிரஸின் மாநில பொது செயலாளர் ஆனார் ஜிது பட்வாரி
மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக ஜிது பட்வாரியை நியமித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே. ஏற்கனவே மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக இருந்த தலைவர் கமல்நாத்துக்குப் பதிலாக பட்வாரி நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மபி., காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக ஜிது பட்வாரி நியமிக்கப்படுகிறார் என்று மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார். இது குறித்து நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ், "மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின்பொது செயலாளராக ஜிது பட்வாரியை காங்கிரஸ் தேசிய தலைவர் நியமித்துள்ளார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "வெளியேறும் பிசிசி தலைவர் ஸ்ரீ கமல்நாத்தின் பங்களிப்பை கட்சி பாராட்டுகிறது," என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மத்திய பிரதேச தேர்தலில் படு தோல்வியடைந்த காங்கிரஸ்
அது போக, உமாங் ஷிங்கர் எதிர்க்கட்சித் தலைவராகவும், ஹேமந்த் கட்டாரே மத்தியப் பிரதேச விதான் சபாவில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்ட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அம்மாநில காங்கிரஸ் பொது செயலாளர் கமல்நாத்துக்கு பதிலாக ஜிது பட்வாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில், மபி., சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்ற தொகுதிகளுள் 163 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், காங்கிரஸ் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, அம்மாநில காங்கிரஸ் பொது செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.
யாரிந்த ஜிது பட்வாரி?
ராவ் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த ஜிது பட்வாரி(49), மத்தியப் பிரதேச காங்கிரஸ் பிரச்சாரக் குழுவின் தலைவராகவும் இருந்திருக்கிறார். 2018 தேர்தலில் மீண்டும் ராவ் தொகுதியில் போட்டியிட்ட பட்வாரி, இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். அதன்பிறகு, கமல்நாத் தலைமையிலான அரசாங்கத்தில் பட்வாரி உயர் கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக கமல்நாத் நியமிக்கப்பட்டபோது, பட்வாரி செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 2020 இல், கமல்நாத் அவரை காங்கிரஸின் மாநில ஊடகப் பிரிவின் தலைவராக நியமித்தார். ஆனால், 2023 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பட்வாரி, ராவ் தொகுதியில் நின்று பாஜகவின் மது வர்மாவிடம் 35,522 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.