20 வருடங்களுக்கு பிறகு ஜப்பான் மகனுடன் இணைந்த பஞ்சாப் தந்தை; வைரலாகும் காணொளி
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த தந்தை 20 வருடங்களுக்குப் பிறகு தனது ஜப்பான் மகனுடன் மீண்டும் இணைந்த காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பஞ்சாபின் அமிர்தசரஸில் வசிக்கும் சுக்பால் சிங், தாய்லாந்தில் ஒரு ஜப்பானிய பெண்ணை சந்தித்தார். பின்னர் 2002 இல் அவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், ஜப்பானின் டோக்கியோவுக்கு அருகிலுள்ள சிபா கெனில் ரின் தாயார் சாச்சியுடன் வசித்து வந்தார். அவர்களின் மகன் ரின் தகாஹாட்டா, 2003இல் பிறந்தார். ஆனால், அவர்களது திருமணம் சிரமங்களை எதிர்கொண்டது. திருமணமான சில வருடங்களில் இருவரும் பிரிந்தனர். இதன் விளைவாக, ஜப்பானில் பிறந்த அவர்களின் இரண்டு வயது மகன் ரின், தந்தை இல்லாத நிலையில் வளர்ந்தார்.
17 ஆண்டுகளாக தொடர்பில் இல்லை
2007இல் இந்தியா திரும்பியதில் இருந்து, சுக்பால் தனது மகன் அல்லது மனைவியுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை. தற்போது ஜப்பானில் வசிக்கும் ரின், தனது தந்தையுடன் மீண்டும் இணைவதற்காக சமீபத்தில் பஞ்சாப் சென்றிருந்தார். இந்த சந்திப்பின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு தந்தையும் மகனும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து எப்படி உணர்ச்சிவசப்பட்டனர் என்பதை அந்தக் காட்சிகள் படம்பிடித்தன. ஜப்பானில் உள்ள ஒசாகா கலைப் பல்கலைக்கழகத்தின் மாணவரான ரின், குடும்ப மரத் திட்டத்தில் பணிபுரியும் போது, குடும்பத்தில் தனது தாயின் பக்கம் மட்டுமே தெரியும் என்றும், தனது தந்தையின் தரப்பிலிருந்து எதுவும் தெரியாது என்பதால், தந்தையின் புகைப்படம் மற்றும் முகவரியை மட்டும் வைத்து வந்து சேர்ந்துள்ளார்.