காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா தளபதி லத்தீப் பட் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
செய்தி முன்னோட்டம்
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி சிஆர்பிஎஃப் சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் தளபதி லத்தீப் பட், பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் எஞ்சியிருந்த ஒரே உள்ளூர் பயங்கரவாதியான லத்தீப் பட், ஜங்கல்போரா கிராமத்தில் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டபோது, அங்கிருந்த மசூதி ஒன்றுக்குள் நுழைந்து பதுங்கிக்கொண்டார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், மசூதியில் இருந்து அவர் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதையடுத்து விடியற்காலைக்கு முன்பு பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் லத்தீப் பட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வீடியோ கால்
"நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்"
மசூதிக்குள் பதுங்கியிருந்த லத்தீப் பட்டை உயிருடன் பிடிப்பதற்கும், மசூதிக்கு சேதம் ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் பாதுகாப்புப் படையினர் அவருடன் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு சரணடையுமாறு வலியுறுத்தினர்.
அந்த வீடியோ உரையாடலில், "நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்" எனப் போலீஸ் அதிகாரி ஒருவர் லத்தீப் பட்டிடம் கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த லத்தீப் பட்,"நான் அல்லாஹ்வைச் சந்திக்க வேண்டும். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" எனக் கூறிச் சரணடைய மறுத்துவிட்டார்.
குல்காம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில்,"அவன் இன்னும் இளைஞன் என்றும், முழு வாழ்க்கையும் அவன் முன் இருக்கிறது என்றும் கூறி சரணடைய வைக்க நாங்கள் கடுமையாக முயற்சித்தோம். ஆனால் அவன் சம்மதிக்காமல் மசூதிக்குள் நுழைந்து அதிகாலை 2:45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தினான்" என்றார்.
தேடுதல் வேட்டை
சிசிடிவி காட்சிகளும் தீவிர தேடுதல் வேட்டையும்
நவம்பர் 11-ஆம் தேதி CRPF சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து, குல்காமின் பல கிராமங்களில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை நடத்தினர்.
இந்த மெகா தேடுதல் நடவடிக்கையின்போது சந்தேகத்தின் பேரில் 500-க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர்.
தாக்குதலுக்கு முன்பாக லத்தீப் பட்டும், அவரது கூட்டாளியான உமர் நிசார் தார் என்பவரும் இணைந்து மிர் பஜார், அக்ரன், ஹப்லிஷ் மற்றும் கிலாம் ஆகிய பகுதிகளில் நோட்டமிட்டது சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.
தாக்குதலுக்கு பிறகு அவர்கள் தப்பிச் சென்ற காட்சிகளையும் போலீசார் கைப்பற்றினர்.
கடந்த 5 முதல் 6 மாதங்களாக லத்தீப் பட்டுக்கு தங்குமிடம் மற்றும் தளவாட உதவிகளை செய்து வந்த உமர் நிசார் தார், என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Kulgam Encounter- LeT Commander Latif Bhat Trapped Inside Mosque Security Forces Urge Him to Surrender
— Kashmir Conflict Stories (@ConflictStories) November 18, 2026
Security forces have cordoned off a mosque in J&K Kulgam district following intelligence inputs that Lashkar-e-Taiba commander Latif Bhat is hiding inside. pic.twitter.com/IziHEcWDLd