ஜேம்ஸ் டைசன் விருது 2026: கோவை மாணவரின் கண்டுபிடிப்பிற்கு தேசிய அளவில் பாராட்டு
செய்தி முன்னோட்டம்
கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் முதுகலை ரோபாட்டிக்ஸ் பயிலும் மாணவர் ஷகீல் அக்தர் எஸ் உருவாக்கிய டிரைக் 2பை (Trike 2π) என்ற சிறிய எலக்ட்ரிக் ரோந்து வாகனம், இந்தியாவின் ஜேம்ஸ் டைசன் விருது 2026 போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடத்தை வென்றுள்ளது. ரயில் நிலையங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பெரிய இடங்களில், பாதுகாப்புப் பணியாளர்கள் எளிதாக ரோந்து செல்ல உதவும் வகையில் இந்த அதிநவீன எலக்ட்ரிக் வாகனம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
டிரைக் 2பை
நெரிசலான இடங்களில் மிக எளிதாக இயங்கும் டிரைக் 2பை எலக்ட்ரிக் வாகனம்
மூன்று சக்கரங்களைக் கொண்டு முன்சக்கர இயக்கத்தில் (Front-wheel drive) இயங்கும் இந்த வாகனம், இருசக்கர வாகனத்தின் வேகத்தையும், நான்கு சக்கர வாகனத்தின் நிலைத்தன்மையையும் ஒரே நேரத்தில் வழங்குகிறது.
வெறும் 5 அடி சுற்றளவுக்குள் 360 டிகிரியில் திரும்பும் திறன் கொண்டதால், குறுகலான பாதைகளிலும் எளிதாக செல்ல முடியும்.
ஓட்டுநர் நின்று கொண்டே இயக்கும் வகையில் தளம் அமைக்கப்பட்டிருப்பதால், ரோந்துப் பணியின் போது சுற்றியுள்ள பகுதிகளை தெளிவாகப் பார்க்கவும், உடனடியாக வாகனத்தில் இருந்து இறங்கி செயல்படவும் இது மாபெரும் உதவியாக அமைகிறது.
பயன்பாடு
கோவை காவல் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில்வேயில் பயன்பாடு
நான்கு கட்டக் கட்டமைப்பு சோதனைகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த வாகனத்தில் சைரன், மைக்கிங் சிஸ்டம், ஜிபிஎஸ் மற்றும் சஸ்பென்ஷன் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் கோவை மாநகரக் காவல்துறையினரால் ரோந்துப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்புப் பணிக்காக 10 வாகனங்கள் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மாணவர் ஷகீலின் இந்த முயற்சி தற்போது எலைக்கிள் இன்னோவேஷன்ஸ் என்ற புதிய ஸ்டார்ட்அப் நிறுவனமாகவும் உருவெடுத்துள்ளது.
மானியம்
மத்திய அரசின் மானியங்களும் சர்வதேச அளவிலான அடுத்தகட்ட இலக்கும்
இக்கண்டுபிடிப்பிற்காக மாணவர் ஷகீல் அக்தருக்கு மத்திய அரசின் AICTE YUKTI திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மானியமும், NewGen IEDC மூலம் ரூ.2 லட்சம் மற்றும் IPTIF மூலம் ரூ.10 லட்சம் நிதி உதவியும் கிடைத்துள்ளன.
மேலும் பல கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் இந்த வாகனத்தை பயன்படுத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது.
தேசிய அளவில் முத்திரை பதித்துள்ள இந்த டிரைக் 2பை எலக்ட்ரிக் வாகனம், அடுத்ததாக ஜேம்ஸ் டைசன் விருது போட்டியின் சர்வதேச அளவிலான சிறந்த 20 கண்டுபிடிப்புகளின் பட்டியலிலும் தேர்வு செய்யப்படப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.