LOADING...
எந்தவொரு அமெரிக்க அதிபரும் இப்படி இருந்ததில்லை; டிரம்ப் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து
டிரம்ப் குறித்து எஸ்.ஜெய்சங்கர் கருத்து

எந்தவொரு அமெரிக்க அதிபரும் இப்படி இருந்ததில்லை; டிரம்ப் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2025
07:14 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வெளியுறவு கொள்கை இதுவரை இல்லாத வகையில் அசாதாரணமானதாக உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "வெளியுறவுக் கொள்கையை இப்போதைய அதிபரைப்போல் வெளிப்படையாக கையாண்ட வேறு எந்த அமெரிக்க அதிபரையும் உலகம் கண்டதில்லை" என்றார். டிரம்பின் அணுகுமுறை, பாரம்பரிய வழிமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தீர்ப்பதில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் குறித்து டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்த நிலையில், ஜெய்சங்கர் அதை மறுத்தார். "1970கள் முதல், அதாவது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பாகிஸ்தானுடனான உறவுகளில் எந்தவொரு மத்தியஸ்தத்தையும் ஏற்க மாட்டோம் என்பது இந்தியாவின் ஒருமித்த தேசிய நிலைப்பாடு" என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

வரிவிதிப்பு

அமெரிக்க வரிவிதிப்பு குறித்து பேச்சு

அமெரிக்கா இந்தியப் பொருட்கள் மீது 50% வரிவிதிப்பு குறித்துப் பேசிய ஜெய்சங்கர், எந்தவொரு வர்த்தகப் பேச்சுவார்த்தையிலும் உள்நாட்டு விவசாயிகளின் நலன்களே மிக முக்கியமானவை என்று கூறினார். "வர்த்தகம், இந்தியாவின் மூலோபாய சுயாட்சி, மத்தியஸ்தத்திற்கு எதிர்ப்பு என வரும்போது, இந்த அரசு மிகவும் தெளிவாக உள்ளது. நமது நிலைப்பாடுகள் உறுதியாக உள்ளன. யாராவது நம்முடன் உடன்படவில்லை என்றால், இந்திய விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க அவர்கள் தயாராக இல்லை என்பதை இந்திய மக்களிடம் சொல்லுங்கள்" என்று சவால் விடுத்தார். அமெரிக்க தூதுக்குழுவின் இந்தியா பயணம் ரத்து செய்யப்பட்ட போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.