அமர்நாத் யாத்திரைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் தேர்தல் நடைபெறலாம்; பாஜக யாரோடு கூட்டணி?
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி நிறைவடையும் அமர்நாத் யாத்திரைக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான பாஜக தேசியத் தலைமை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாஜக தலைவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா டுடே செய்தியின் படி, மாநில தலைவர்களை சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. முன்னதாக நேற்று இரவு அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில், நடைபெறவுள்ள ஜம்மு காஷ்மீர் தேர்தலில், பாஜக 90 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் விவரிக்கின்றன.
சட்டசபை தேர்தலையொட்டி, முதல்வர் வேட்பாளரை கட்சி முன்னிறுத்தாது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலுக்காக எந்த கட்சியுடனும் பாஜக தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்காது என்றும், அக்கட்சியின் தலைமை மாநில தலைவர்களுக்கு தெரிவித்துள்ளது. இருப்பினும், தேர்தல் நிறைவுற்றதும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று செய்திகள் தெரிவித்தன. எனினும், இந்த சட்டசபை தேர்தலையொட்டி, முதல்வர் வேட்பாளரை பாஜக சார்பில் வேட்பாளர்களை முன்னிறுத்தாது எனவும் திட்டவட்டமாக கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்றும் அந்த தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியா டுடே கூறியுள்ளது.