புதிய மைல்கல்லை எட்டிய ITC நிறுவனம்!
மும்பை பங்குச் சந்தையில் ஐடிசியின் பங்குகள், இன்று அதன் பங்கு வரலாற்றிலேயே முதன் முறையாக 400 ரூபாயைக் கடந்து வர்த்தகமானது. சிகரெட் முதல் ஓட்டல் வரை பல்துறை நிறுவனமான ஐடிசி (ITC) இன்று புதிய எலைட் பட்டியலில் இணைந்திருக்கிறது. 5 ட்ரில்லியன் ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய இந்திய நிறுவனங்களின் பட்டியலில் 11-வதாக இணைந்திருக்கிறது ஐடிசி. இன்று வர்த்தகத் தொடக்கத்தின் போதே நேற்ற விட 1.1 சதவிகிதம் அதிகமாக 402.60 ரூபாய் என்ற அளவில் கேப்அப்பிலேயே தொடங்கியது. இந்த ஆண்டு (2023) மட்டும் ஐடிசி நிறுவனப் பங்குகள் 21% ஏற்றம் கண்டிருக்கின்றன. இந்த ஏற்றத்தைத் தொடர்ந்தே 5 ட்ரில்லியன் ரூபாய் சந்தை மதிப்பை எட்டியிருக்கிறது ஐடிசி.
புதிய மைல்கல்:
முன்னதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, இந்துஸ்தான் யுனிலிவர், எல்ஐசி, எஸ்பிஐ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ரூ.5 ட்ரில்லியன் சந்தைமதிப்பை எட்டியிருக்கின்றன. பணவீக்கம், கணிக்கமுடியாத காலநிலை, குறைவான கிராமப்புற விற்பனை என பல சவால்கள் இருந்த போதும், தொடர்ந்து நல்ல பெர்ஃபான்ஸைக் கொடுத்து வருகிறது ஐடிசி. நிலையான பணப்புழக்கம், தொடர்ந்து கொடுக்கும் டிவிடெண்ட்கள் மற்றும் இரட்டிப்பாகிய சிகரெட் விற்பனையும் சேர்ந்து ஐடிசியின் பக்கம் முதலீட்டாளர்களின் கவனத்தை திருப்பியிருக்கிறது. கடந்த சில காலாண்டுகலாகவே ஐடிசியின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாகவே இருக்கின்றன. சிகரெட் மட்டுமல்லாது FMCG, ஓட்டல் மற்றும் பேப்பர்போர்டு, பேப்பர் & பேக்கேஜிங் துறைகளிலும் ஐடிசியின் நடவடிக்கைகள் சிறப்பாக இருந்ததைத் தொடர்ந்தே இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறது ஐடிசி.