வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 56 நபர்களை மீட்டது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 56 சுற்றுலா பயணிகளை திபெத்திய எல்லை காவல்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது. சிக்கிமில் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ராணுவ வீரர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 141 நபர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. வடக்கு சிக்கிம் மாநிலத்தில் சுங்தாங் பகுதியில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட 4 பெண்கள் மற்றும் 52 ஆண்கள் என 56 பேரை இந்தோ திபெத்திய எல்லை காவல்படை கயிறு மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட நபர்கள் அவர்களின் குடும்பத்தை தொடர்பு கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.