இந்தியாவின் பெயர் மாற்றப்படுகிறதா: கொந்தளிக்கும் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள்
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில், இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால், பெரும் சர்ச்சை கிளம்பி உள்ள நிலையில், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் இதற்கு கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் என்ன கூறி இருக்கிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: "பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பாஜகவுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது."
ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்:
"பெயர் மாற்றம் நடப்பதாக எனக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. பல எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து INDIA என்று பெயரிட்டதால், மத்திய அரசு நாட்டின் பெயரை மாற்றுமா? நாடு 140 கோடி மக்களுக்கு சொந்தமானது, ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கூட்டணியின் பெயரை பாரத் என்று மாற்றினால், பாரதத்தின் பெயரை பாஜக என்று மாற்றுவார்களா?" திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி: "இந்தியாவின் பெயர் மாற்றப்படுவதாக கேள்விப்பட்டேன். மாண்புமிகு ஜனாதிபதியின் பெயரில் வெளியான ஜி20 அழைப்பிதழில் பாரத் என்று எழுதப்பட்டுள்ளது. நாட்டை பாரத் என்கிறோம், ஆங்கிலத்தில் இந்தியா என்று சொல்கிறோம். உலகம் நம்மை இந்தியா என்று அறியும். திடீரென்று நாட்டின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?"