இந்தியா கூட்டணியில் தொய்வா? பீகார் முதல்வருடன் உரையாடிய மல்லிகார்ஜுன கார்கே
நடக்கவிருக்கும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக'வை ஒன்றிணைந்து எதிர்கொள்ள அமைந்த கூட்டணி தான் 'இந்தியா'. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த 'இந்தியா' கூட்டணி சார்பில் இதுவரை 3 ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ளது. இதனிடையே கடந்த 2ம் தேதி பாட்னாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்துள்ளது. இதில் பங்கேற்ற பீகார் பிரதமர் நிதிஷ் குமார், 'மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தான் இந்த 'இந்தியா' கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால் அதில் தற்போது எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை' என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 'அனைத்து கட்சியின் ஒப்புதல் படியே இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை பொறுப்பினை ஏற்றது' என்று கூறியுள்ளார்.
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்ததாக தகவல்
மேலும், 'ஆனால் தலைமை பொறுப்பினை ஏற்ற காங்கிரஸ் தற்போது நடக்கவுள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் பணிகள் மற்றும் பிரச்சாரங்களில் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல்கள் முடிந்த பின்னர் தான் 'இந்தியா' கூட்டணியின் அடுத்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் என்று நினைக்கிறேன்' என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று(நவ.,3) இரவு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை தொலைபேசியில் அழைத்து அவருடன் உரையாடியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த உரையாடலின் போது மல்லிகார்ஜுன் கார்கே, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த பின்னர் 'இந்தியா' கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.