'எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி என்ன இந்திய கரன்சியா?' - கவிஞர் வைரமுத்து காட்டம்
'எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழி என்ன இந்திய கரன்சியா?' என்று கவிஞர் வைரமுத்து கேள்விகளை எழுப்பியுள்ளார். அண்மையில் கோவாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய பெண் ஒருவரிடம் மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் 'இந்தி தெரியுமா?' என்று கேட்டுள்ளார். தொடர்ந்து அவர் அந்த பெண்ணிடம் 'இந்தி மொழி தான் தேசிய மொழி' என்றும், 'தமிழ்நாடு இந்தியாவில் தானே உள்ளது. எனவே இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி மொழியை கற்க வேண்டும்' என்றும் அத்துமீறி பேசியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த பாதுகாப்பு படை வீரர் அந்த பெண்ணிடம் தான் பேசியதற்கு மன்னிப்பு கோரினார் என்று அந்த பெண்ணே தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட வைரமுத்து
இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில், "எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழி என்ன இந்திய கரன்சியா?, இந்தி தெரியாதோர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா?" என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் அவர், "இந்திய நாடு இந்தி என்னும் சொல்லடியில் பிறந்ததா?"என்றும், "இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி தெரியாதோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? என்றும் கேட்டுள்ளார். தொடர்ந்து, "வடநாட்டு சகோதரர்கள் தமிழகத்திற்கு வந்தால் தெள்ளு தமிழ் மக்கள் தமிழ் தெரியுமா? என்று எள்ளியதுண்டா?" என்றும் பதிவிட்டுள்ளார்.