'சுற்றுலா பயணிகளை ஈர்க்க லட்சத்தீவில் பெரும் முதலீடு': இடைக்கால பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்
இந்திய சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை கூறினார். மாலத்தீவுடனான பிரச்சனைகளுக்கு பிறகு, லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்ல இந்தியர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகளை ஈர்க்க லட்சத்தீவில் பெரும் முதலீடு செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தீவு யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மாலத்தீவு மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பிரச்சனைகள்
பிரதமர் மோடி தனது லட்சத்தீவு பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை சமீபத்தில் வெளியிட்டு, அந்த தீவை இந்தியர்களுக்கான சுற்றுலா தலமாக அறிவித்தார். இதையடுத்து, மாலத்தீவுக்கு மாற்றான ஒரு சுற்றுலா தலமாக லட்சத்தீவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று கருதி, பிரதமர் மோடியையும் லட்சத்தீவையும் 3 மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்து தரக்குறைவாக பேசியிருந்தனர். இதனால், மாலத்தீவு மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள் சேதமடைந்துள்ளன. இந்தியாவுக்கு எதிரான மாலத்தீவின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பல இணைவாசிகள், மாலத்தீவை புறக்கணித்து லட்சத்தீவை ஆதரிக்க அழைப்பு விடுத்தனர். அதனால், மாலத்தீவுக்கு செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.