தமிழகத்தில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் தீவிர பரவல்: நோயாளிகளை 3 பிரிவுகளாக பிரித்து சிகிச்சை அளிக்கச் சுகாதாரத் துறை உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் நிலவி வரும் திடீர் மழை, அதீத வெப்பம் மற்றும் பனிப்பொழிவு போன்ற சீரற்ற சீதோஷ்ண நிலை காரணமாக, பருவக்கால இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, தொற்றின் வீரியத்தைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் நோயாளிகளை அவர்களின் அறிகுறிகளின் அடிப்படையில் 3 பிரிவுகளாக (Category A, B, C) பிரித்துச் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சிகிச்சை முறைகள்
இன்ஃப்ளூயன்ஸா நோயாளிகளுக்கான 3 வகை சிகிச்சை முறைகள்
1. பிரிவு A: லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வெடுத்தால் போதுமானது. இவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையோ அல்லது ஓசல்டாமிவிர் போன்ற சிறப்பு ஆன்டிவைரல் மருந்துகளோ தேவையில்லை.
2. பிரிவு B: முதியவர்கள் (65 வயதுக்கு மேற்பட்டோர்), குழந்தைகள், கர்ப்பிணிகள், இதய நோய், நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக நோய், புற்றுநோய் சிகிச்சை பெறுவோர் போன்ற அதிக ஆபத்துள்ள பிரிவினருக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரின் தீவிர கண்காணிப்புடன் தேவையின் அடிப்படையில் ஓசல்டாமிவிர் மருந்துகள் உட்கொள்ளப் பரிந்துரைக்கப்படும்.
சிகிச்சை
தீவிர பாதிப்பு சிகிச்சை
3.பிரிவு C: மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, சளியில் ரத்தம் கலந்து வருதல், ரத்த அழுத்தம் குறைதல் அல்லது மயக்க நிலை போன்ற தீவிர பாதிப்புகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ICU-வில் கண்காணிக்கப்பட வேண்டும்.
தொற்றை எதிர்கொள்ள மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் அசித்ரோமைசின் மற்றும் ஓசல்டாமிவிர் உள்ளிட்ட பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான 320 க்கும் மேற்பட்ட முக்கிய மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருமல் மற்றும் தும்மல் மூலம் இத்தொற்று எளிதில் பரவுவதால், பொதுமக்கள் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், கைகளை அடிக்கடி சோப்பு போட்டுப் சுத்தமாகக் கழுவித் தற்காத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.