மத்திய பிரதேசம்: தனது காதலியை கரம் பிடிப்பதற்காக பாலினத்தை மாற்றி கொண்ட திருநம்பி
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் திருநம்பி(Transman) ஒருவர் தனது நீண்ட நாள் காதலியை சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார். அல்கா என்று முன்பு அழைக்கப்பட்ட அஸ்தித்வா சோனி(47), குடும்ப நீதிமன்றத்தில் தனது காதலியான ஆஸ்தாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்தில் இரு தரப்பிலிருந்தும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அல்கா சோனியாகப் பிறந்த அஸ்தித்வா, சில வருடங்களுக்குப் பிறகு, தான் ஒரு பெண்ணல்ல என்று உணர்ந்து ஆணாக வாழத் தொடங்கினார். அதன் பின், தனது 47வது பிறந்தநாளில், அஸ்தித்வா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு, தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
புதுமண தம்பதிகளுக்கு நாளை பாரம்பரிய முறைப்படி திருமணம்
திருமணத்தை ஒழுங்குபடுத்தும் தனிப்பட்ட சட்டங்கள் உட்பட, தற்போதுள்ள சட்டங்களின்படி, மாற்று பாலின உறவுகளில் உள்ள திருநர்களுக்கு(Transgender) திருமணம் செய்துகொள்ள உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் அக்டோபர் மாதம் தீர்ப்பளித்ததை அடுத்து, தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் அஸ்தித்வா. மேலும், நாளை அந்த புதுமண தம்பதிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முன்பு, தம்பதியினர் தங்கள் நிலைமையை விளக்கி இந்தூர் துணை ஆட்சியர் ரோஷன் ராயிடம் விண்ணப்பம் அளித்தனர். ஆட்சியர் அதை பரிசீலனை செய்ததையடுத்து, அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடந்த வியாழக்கிழமை, அஸ்தித்வா மற்றும் ஆஸ்தாவின் திருமணச் சான்றிதழைக் குடும்ப நீதிமன்றம் வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.