புதிய கிரீன் கார்டு பரிந்துரைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை
அமெரிக்க தற்போது வெளியிட்டு இருக்கும் புதிய கிரீன் கார்டு பரிந்துரையில் அதிக வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்கள் பயன்பெறுவார்கள். ஆசிய அமெரிக்கர், பூர்வீக ஹவாய் மற்றும் பசிபிக் தீவுவாசிகளுக்கான வெள்ளை மாளிகை ஆணையம் (AANHPI) பரிந்துரைத்துள்ள இந்த புதிய நடைமுறையில், கிரீன் கார்டு விண்ணப்ப செயலாக்கத்தின் ஆரம்ப கட்டத்தில், வேலைவாய்ப்பு அங்கீகார அட்டை மற்றும் பிற தேவையான பயண ஆவணங்களை வழங்க இந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் 80 லட்சம் விண்ணப்பதாரர்கள் பலன் பெறுவார்கள். அதில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிந்துரை அமலாவதற்கு, 18 மாதங்கள் வரை எடுக்கலாம். இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
கிரீன் கார்டு பரிந்துரையின் பயனாளிகள்
இந்த புதிய பரிந்துரையின் படி, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (DHS -USCIS), ஐந்து வருடம் அல்லது அதற்கு மேல் விசாவிற்காக காத்திருக்கும் அங்கீகரிக்கப்பட்ட EB-1, EB-2, EB-3 வகை வேலைவாய்ப்பு சார்ந்த, I-140 விசா விண்ணப்பதாரர்களுக்கு, வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் (EADs) மற்றும் பயண ஆவணங்களை வழங்க வேண்டும். கிரீன் கார்டு விண்ணப்பங்களை அவர்கள் தாக்கல் செய்தார்களா என்பதைப் பொருட்படுத்தாமல் இது வழங்கப்படும். இந்த புதிய பரிந்துரை, அமெரிக்காவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் நிலவி வரும் ஆட்பற்ற குறையை சரி செய்ய உதவும் என கூறப்படுகிறது.
கிரீன் கார்டு பரிந்துரையின் நன்மைகள்
இந்த பரிந்துரை அமலாகும் முன், விசா பேக்லாக்(backlog) உள்ள ஒப்பந்தப் பணியாளர்கள், தங்கள் பணி விசாவை (H-1B / L-1) தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். இந்த நடைமுறையின் போது அவர்களால் சுதந்திரமாக பயணிக்க முடியாது, மேலும் அவர்கள் இரண்டு மாதத்திற்கு மேலாக வேலையில்லாமல் இருக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறையில், வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் மற்றும் பயண ஆவணங்கள், கிரீன் கார்டின் இறுதி கட்ட பரிசீலினை வரை செல்லுபடி ஆகும். இந்த புதிய நடைமுறைகள், தொழிலாளர்கள் எந்த விதமான பிரச்சனையும் இன்றி சுதந்திரமாக பயணிக்க வழிவகுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. கிரீன் கார்டு என்பது, அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை பெற்றதற்கான ஆவணம் ஆகும்.