மதம் மாறி பாகிஸ்தான் காதலரை மணந்து கொண்டார் இந்திய பெண் அஞ்சு
இந்தியாவில் இருந்து தன் பேஸ்புக் காதலரை சந்திப்பதற்காக பாகிஸ்தான் சென்ற அஞ்சு என்ற இந்தியப் பெண், இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பாகிஸ்தானிய காதலரான நஸ்ருல்லாவை மணந்து கொண்டார். பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் தனது காதலரை தேடி நுழைந்த சீமா ஹைதரின் கதை இந்தியாவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்திய பெண் ஒருவர் தனது பேஸ்புக் காதலரை தேடி பாகிஸ்தான் சென்றிருக்கும் செய்தி சில நாட்களுக்கு முன் வெளியாகியது. இந்நிலையில், இந்திய பெண் அஞ்சு தற்போது மதம் மாறி அவரது பாகிஸ்தான் காதலர் நஸ்ருல்லாவை மணந்து கொண்டதாக செய்திகள் கூறுகின்றன. மதம் மாறியதை அடுத்து, அவரது பெயரும் தற்போது பாத்திமா என்று மாற்றப்பட்டுள்ளது.
அஞ்சு ஏற்கனவே திருமணமானவர், அவருக்கு 2 குழந்தைகள் இருக்கிறது
அஞ்சு (35) மற்றும் நஸ்ருல்லா (29) ஆகியோருக்கு நிக்காஹ் நடைபெற்ற செய்தியை மலாக்கண்ட் பிரிவு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் நசீர் மெஹ்மூத் சத்தி உறுதிப்படுத்தியுள்ளார். அந்த பெண் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்னர் அவருக்கு பாத்திமா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். நஸ்ருல்லாவின் குடும்ப உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் திர் பாலா மாவட்ட நீதிமன்றத்தில் அவர்களுக்கு திருமணம் நடந்தது என்று காவல்துறை கூறியுள்ளது. அஞ்சு ஏற்கனவே திருமணமானவர் ஆவார். ராஜஸ்தானில் இருக்கும் அஞ்சுவின் கணவர் அரவிந்த், தனது மனைவி விரைவில் திரும்பி வருவார் என்று முன்பு நம்பிக்கை தெரிவித்திருந்தார். அவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.