ரயில் சேவை விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் இந்திய ரயில்வே
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் இந்தியாவிற்குள் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. விழாக் காலங்களில் அளவுக்கு அதிகமாக நிரம்பி வழியும் ரயில் நிலையங்களில் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருவது வழக்கமாகிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு கூட பீகாரின் சாத் பண்டிகையையொட்டி அம்மாநிலத்திற்குச் செல்வதற்கான சிறப்பு ரயிலைப் பிடிப்பதற்காக சூரத் ரயில் நிலையத்தில் குவிந்த கூட்டத்தில் சிக்கி, 40 வயது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி தொடர்ந்து அதிகரிக்கும் பயணிகள் கூட்டத்தால் தத்தளித்து வருகிறது இந்தியா. இந்நிலையில் தான், அடுத்த மூன்று முதல் நான்கு வருடங்களில் ரயில் சேவை விரிவாக்கத் திட்டமொன்றை இந்திய ரயில்வே செயல்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்திய ரயில்வேயின் திட்டம் என்ன?
தற்போது இந்தியாவில் நாளொன்றுக்கு 10,748 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மூலம் ஆண்டுக்கு 800 கோடி பயணிகள் இந்தியாவிற்குள் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். புதிய விரிவாக்கத் திட்டத்தின் படி, ஒரு நாளில் இயக்கப்படும் ரயிலின் அளவை 13,000 ஆகவும், அதன் மூலம் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் அளவை ஆண்டுக்கு 1000 கோடியாகவும் உயர்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், ஆண்டுக்கு 4,000 முதல் 5,000 கிமீ வரையிலான புதிய ரயில் இருப்புப் பாதைகளையும் கட்டமைக்க மேற்கூறிய ரயில் சேவை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டிருக்கிறது. இவை தவிர, ரயில் பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்குவும் திட்டமிட்டு வருகிறது இந்திய ரயில்வே.
பயண நேரத்தைக் குறைக்கும் இந்திய ரயில்வேயின் திட்டம்:
இன்ஜினைக் கொண்டு இயக்கப்படும் ரயில்களில், முடுக்கம் மற்றும் வேகக் குறைப்பு ஆகியவற்றுக்கான நேரத்தைக் குறைப்பதன் மூலம் பயண நேரத்தைக் குறைக்க முடியும். அதாவது ஒரு ரயில் நிறுத்தத்தை அடைவதற்கு முன்பு ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு, முழுமையாக நிற்பதற்கு இடைப்பட்ட நேரத்தையும், மீண்டும் ரயில் புறப்படுவதில் இருந்து அதிகபட்ச வேகத்தை எடுத்துக் கொள்வதற்கு இடைப்பட்ட நேரத்தையும் குறைப்பதன் மூலம் ரயிலின் பயண நேரத்தைக் குறைக்க முடியும். இழுவை மற்றும் தள்ளுதல் முறையில் மேற்கூறிய நடவடிக்கையானது பல்வேறு ரயில்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையைப் பயன்படுத்தினால், டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் ரயிலின் பயண நேரத்தை இரண்டு மணி நேரம் வரை குறைக்க முடியுமாம்.