'கிழக்கிந்திய கம்பெனியின் பெயரிலும் INDIA இருந்தது': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி குறித்தும், 'INDIA' கூட்டணி கட்சிகளின் பெயர் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி(INDIA) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜகவின் முக்கிய நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் இன்று பேசிய பிரதமர் மோடி, "கிழக்கிந்திய நிறுவனத்தின் பெயரிலும் இந்தியா இருந்தது. 'இந்தியன் முஜாஹிதீன்' பெயரிலும் இந்தியா இருந்தது. வெறும் பெயரை மட்டும் உபயோகிப்பதால் எதுவும் நடந்துவிடாது" என்று கூறியுள்ளார்.
'எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடக்கின்றன': பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பாஜக நாடாளுமன்றக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, மணிப்பூர் விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி குறித்து பேசிய பிரதமர் மோடி, "திசை இல்லாமல் திரிந்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள்" என்று எதிர்கட்சிகளை கடுமையாக சாடினார். மேலும், எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடக்கின்றன என்று கூறிய அவர், எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை நீண்ட காலம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இல்லாதது போல் இருக்கிறது என்று தெரிவித்தார். இதற்கிடையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.