மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு
20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 2003ல் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(பாஜக கூட்டணி) அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. INDIA கூட்டணி கட்சிகளில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மக்களவையை தொடர்ந்து, மாநிலங்களவையில் பாஜகவுக்கு எப்படி முட்டுக்கட்டை போடுவது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் விவாதித்து வருகின்றன. மணிப்பூரில் நிலவும் அமைதியின்மை குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும், இரு அவைகளிலும் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது
அந்த கோரிக்கையை நடைப்பமுறைப்படுத்துவதற்கு இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் உதவும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே சலசலப்பு நிலவி வரும் நிலையில், இது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. மணிப்பூர் நிலைமை குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இதனையடுத்து, ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இரு அவைகளையும் ஒத்திவைத்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.