குடும்ப வன்முறை வெளிநாட்டில் நடந்திருந்தாலும் அதை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்கலாம்
வெளிநாட்டில் நடந்திருந்தாலும் குடும்ப வன்முறை வழக்கை இந்தியாவில் உள்ள நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் கூறியுள்ளது. ஜெர்மனியில் இருக்கும் போது தனக்கு குடும்ப வன்முறை நடந்ததாக ஒரு பெண் தன் முன்னாள் கணவன் மீது புகார் அளித்திருந்தார். அந்த சம்பவம் ஜெர்மனியில் நடந்ததாக கூறப்படுவதால் நாக்பூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்று குற்றம்சாட்டப்பட்டவர் சார்பில் கூறப்பட்டது. இந்த வழக்கிற்கு நீதிபதி ஜி.ஏ.சனாப் தீர்ப்பு வழங்கினார். அவர் எழுதிய தீர்ப்பில், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்(DV சட்டம்) ஒரு "சமூக நன்மை பயக்கும் சட்டம்" என்றும் குற்றம் எங்கு நடந்திருக்கிறது என்பது முக்கியம் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்த கணவன்
"DV சட்டத்தின் பிரிவு 1 இன் கீழ் கூறப்பட்டிருக்கும் படி, குடும்ப வன்முறைச் சட்டம் இந்தியாவுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், வெளிநாட்டு மண்ணில் ஏற்படும் குடும்ப வன்முறையையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்" என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. புகார் அளித்த பெண் எதிர்கொண்ட அதிர்ச்சி, துன்பம் மற்றும் துயரத்தை கருத்தில் கொண்டால், இந்திய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறும் கருத்துக்களை நிராகரிக்க அது போதுமானதாக இருக்கும் என்று உயர் நீதிமன்றம் கூறி இருக்கிறது. ஜெர்மனியில் இருந்தபோது கருக்கலைப்பு செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அந்த பெண் குற்றமசாட்டப்பட்டவரின் குடும்பத்தால் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.