
பாகிஸ்தான் நிறுத்தாதவரை பதிலடி தாக்குதல் தொடரும்; மத்திய அரசு உறுதி
செய்தி முன்னோட்டம்
இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக கடுமையாக இந்தியா பதிலடி கொடுக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 8) மீண்டும் உறுதிப்படுத்தியது.
ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற மூத்த பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் சமீபத்திய இந்திய நடவடிக்கைகள் துல்லியமானவை மற்றும் தற்காப்பு நடவடிக்கை மட்டுமே என்பதை தெளிவுபடுத்தினர்.
அதே நேரத்தில் எதிர்காலத்தில் பாகிஸ்தான் ஆத்திரமூட்டும் வகையில் தாக்குதல் நடத்தினால் சம பலத்துடன் எதிர்கொள்ளப்படும் என்பதை வலியுறுத்தினர்.
எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்ததாக கர்னல் சோபியா குரேஷி உறுதிப்படுத்தினார். லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு கட்டமைப்பு வீழ்த்தப்பட்டது என்று கூறினார்.
முறியடிப்பு
பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு
மே 7 அன்று சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்குவதைத் தவிர்த்து வந்த இந்தியாவின் முந்தைய நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டி, இந்தியாவின் பதில் களத்திலும் தீவிரத்திலும் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு சமமாக இருக்கும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தியாவின் கட்டுப்படுத்தப்பட்ட நிலைப்பாடு இருந்தபோதிலும், ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர் மற்றும் பூஞ்ச் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள ராணுவத் தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது.
இந்தத் தாக்குதல்களை இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் திறம்பட முறியடித்தன. தாக்குதல் முயற்சிக்கான சான்றாக இடிபாடுகள் மீட்கப்பட்டன.
எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு
எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டில் தாக்குதல்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதல்கள் அதிகரித்ததாகவும், இதன் விளைவாக 16 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்தார்.
பதற்றத்தைத் தணிப்பதில் இந்தியா தொடர்ந்து விருப்பம் கொண்டிருப்பதாகவும், ஆனால் சீண்டினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பான டிஆர்எஃப் பங்கை பாகிஸ்தான் மறுத்ததை வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விமர்சித்தார்.
இந்தியாவின் நடவடிக்கைகள் ராணுவத் தாக்குதல் அல்ல என்றும் பயங்கரவாத உள்கட்டமைப்பை நடுநிலையாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.