Loading...
இறுதிக்கட்டத்தை நெருங்கிய இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இறுதிக்கட்டத்தை நெருங்கிய இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 14, 2026
07:00 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை (நவம்பர் 14) தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஹெச்.டி.தலைமைத்துவ உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பெரும்பாலான சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டார். எஞ்சியுள்ள ஒருசில விவகாரங்கள் இந்தியத் தரப்பை விட அமெரிக்கத் தரப்பில் நிகழ்ந்த கொள்கை மாற்றங்களாலேயே நிலுவையில் இருப்பதாகவும், ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஜி20 உச்சிமாநாடு

மியாமி ஜி20 உச்சிமாநாட்டில் மோடி - டிரம்ப் சந்திப்பின் போது அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

அடுத்த மாதம் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெறவுள்ள ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

இந்த மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக முன்னேற்றங்கள் குறித்துப் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோவும் ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகக் கூறியிருந்த நிலையில், மியாமி சந்திப்பின் போது இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த வரி சலுகை

போட்டி நாடுகளை விட இந்திய பொருட்களுக்கு சிறந்த வரிச் சலுகைகளைப் பெறும் இலக்கு

கடந்த 2025-ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வரித் தகராறுகளைத் தீர்க்கவும், சந்தை அணுகலை மேம்படுத்தவும் தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக விளங்குவதால், இந்த ஒப்பந்தம் இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் பயனளிக்கும் என ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக ஜவுளி உள்ளிட்ட துறைகளில் மற்ற போட்டி நாடுகளை விட இந்தியப் பொருட்களுக்கு சாதகமான மற்றும் சமநிலையான வரி விகிதங்களைப் பெறுவதே இந்தியாவின் முக்கிய நோக்கமாகும்.

ADVERTISEMENT

நுணுக்கமான ஆய்வு

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு நுணுக்கமான ஆய்வு

முந்தைய காலங்களில் போட்டி ஆசிய நாடுகளுடன் அவசரமாகச் செய்யப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் கையெழுத்தாகும் வர்த்தக ஒப்பந்தங்கள் மிகுந்த உத்திசார் மற்றும் பொருளாதார ஆய்வுகளுக்குப் பிறகே இறுதி செய்யப்படுகின்றன.

கோடி கணக்கான மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் இதில் அடங்கியுள்ளதால், ஒவ்வொரு பொருளின் வரி விகிதத்தையும் நுணுக்கமாக ஆய்வு செய்தே இந்த பேச்சுவார்த்தைகளை இறுதிக்கட்டத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

ADVERTISEMENT