இந்தியா-அமெரிக்கா இடையே மெகா ஜெட் எஞ்சின் ஒப்பந்தம்
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக செல்ல இருக்கிறார். அப்போது, அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து போர் விமான எஞ்சின்களை தயாரிக்க ஒப்புக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதிக்கான கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளை மேம்படுத்துவதில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் சீனாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையே மெகா ஜெட் எஞ்சின் ஒப்பந்தம் போடப்பட்டால், அது இரு நாடுகளுக்கும் இடையேயான இராணுவ ஒத்துழைப்பின் பெரும் அடையாளமாக கருதப்படும். இந்த ஒப்பந்தத்தின் இறுதி முடிவு மோடியின் அமெரிக்க பயணத்தின் போது எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தை வெள்ளை மாளிகை விரைவில் ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மாசசூசெட்ஸை தளமாகக் கொண்ட விண்வெளி உற்பத்தி நிறுவனமான ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனமும், இந்தியாவில் இருக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் இணைந்து தேஜாஸ் இலகு-போர் விமானத்தின் என்ஜின்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் இதுவாகும். இந்த ஒப்பந்தத்தை வெள்ளை மாளிகை ஏற்றுக்கொண்டால், தேஜாஸ் இலகு-போர் விமானத்தின் என்ஜின்கள் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கிவிடும். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22 ஆம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். அங்கு அவருக்கு அரசு முறை விருந்து அளிக்கப்பட உள்ளது. அதன்பிறகு, அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார்.