இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ'
செய்தி முன்னோட்டம்
கேரளாவின் கனவுத் திட்டம் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்ட 'கொச்சி வாட்டர் மெட்ரோ' திட்டத்தை இன்று கொடியசைத்து துவக்கி வைக்கவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
கொச்சி மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பத்து தீவுகளை இணைக்கும் வகையில் 38 முனையங்கள் மற்றும் 78 எலெக்ட்ரிக் படகுகளுடன் ரூ.1,136 கோடியில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது இந்தத் திட்டம்.
கடந்த நூற்றாண்டில் 90% கேரள மக்கள் சிறிய படகுகளைப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது புதிய பாலங்கள் மற்றும் சாலைகளின் கட்டமைப்பு படகுப்போக்குவரத்தை 3%-மாகக் குறைத்துவிட்டது.
சாலைகளில் வாகன நெரிசலைக் குறைப்பது, அதன் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பது எனப் பல வழிகளில் இந்த கொச்சி வாட்டர் மெட்ரோ கேரளாவிற்கு பயனுள்ளதாக இருக்கும்.
கேரளா
கொச்சி வாட்டர் மெட்ரோ (Kochi Water Metro):
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படவிருக்கும் 78 படகுகளுமே பேட்டரியால் இயங்கும் வகையிலான எலெக்ட்ரிக் ஹைபிரிட் வகையைச் சேர்ந்தவையே.
இந்தப் படகுகளில் லித்தியம் டைட்டனேட் ஆக்ஸைடு பேட்டரிக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனைக் குறிப்பிட்ட வகையில் 15 நிமிடத்தில் மிக வேமகாக சார்ஜ் செய்து விட முடியுமாம்.
இந்த பேட்டரிக்களின் ஆயுட்காலம் 7 முதல் 10 ஆண்டுகள். உலகிலேயே வணிக ரீதியான பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் நீண்ட ஆயுட்காலம் கொண்ட, அதே நேரம் பாதுகாப்பான பேட்டரிக்கள் இவை.
ஒவ்வொரு படகும் 50 பயணிகளை ஏற்றிச்செல்லும் திறனுடன் இருக்கின்றன. இவற்றில் 23 படகுகள் 100 பயணிகள் வரை ஏற்றிச் செலுக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. 76 கிமீ தூரத்திற்கு 15 வழித்தடங்களில் இந்தப் படகுகள் இயக்கப்படவிருக்கின்றன.