"இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா உறுதியாக நிற்கிறது": பிரதமர் மோடி
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை, பாலஸ்தீன போராளிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையே தொடங்கிய மோதலால் இதுவரை 1600 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக கூறிய பிரதமர் மோடி, இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா இருக்கிறது என்று இஸ்ரேல் பிரதமருக்கு உறுதியளித்துள்ளார். பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை இந்தியா கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இனி பாலஸ்தீனத்துடனான இந்தியாவின் உறவுகள் என்ன ஆகும்?
"பிரதமர் நெதன்யாகு என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதற்காகவும், தற்போதைய நிலைமை குறித்து விவரித்ததற்க்காகவும் அவருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள் இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறார்கள். பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை எப்படி வெளிப்படுத்தினாலும் இந்தியா அதை கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்கிறது" என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில்(ட்விட்டர்) பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் இந்தியாவின் நட்பு நாடுகள் என்பதால், இந்த நெருக்கடியைத் தீர்க்க உதவ முன்வர வேண்டும் என்று இந்தியாவுக்கான பாலஸ்தீனத்தின் தூதர் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான், தற்போது இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.