இந்திய விசா விதிகளில் மாற்றம்: பிரிவுகள் 13-லிருந்து 9 ஆகக் குறைப்பு, விண்ணப்பப் படிவங்களில் 70% குறைப்பு
செய்தி முன்னோட்டம்
வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வருவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்திய விசா விதிகளில் மாபெரும் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, பிரதான விசா பிரிவுகளின் எண்ணிக்கை 13-லிருந்து 9 ஆகவும், துணைப் பிரிவுகள் 49-லிருந்து 23 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், விசா விண்ணப்பப் படிவங்களில் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் நிரப்ப வேண்டிய இடங்கள் 65 முதல் 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளின் விசா நடைமுறைகள் மற்றும் சர்வதேசத் தரங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை மேம்படுத்தும் பணியில் உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய நடைமுறையின் கீழ் விசாக்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
விசா சீர்திருத்தத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்
வழக்கமான சுற்றுலா விசா இனி 'விசிட்டர் விசா' என அழைக்கப்படும். இது V-1 (30 நாட்கள் - வணிகக் கூட்டங்கள், குறுகிய கால மருத்துவ ஆலோசனை, கலை மற்றும் மொழிப் படிப்புகள்) மற்றும் V-2 (1, 5 அல்லது 10 ஆண்டுகள் - நீண்ட காலப் பயணம் மற்றும் மலையேற்றம்) என இரு துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
நவீன மருத்துவ சிகிச்சைக்கு M-1 விசாவும், ஆயுஷ் சிகிச்சைகளுக்கு M-3 விசாவும் ஒரு வருட பலமுறை நுழைவு வசதியுடன் வழங்கப்படும். நோயாளிகளுடன் வருபவர்களுக்கு முறையே M-2 மற்றும் M-4 துணை விசாக்கள் வழங்கப்படும்.
முக்கிய மாற்றங்கள்
மாணவர் விசா மற்றும் வணிக விசா பிரிவில் முக்கிய மாற்றங்கள்
பள்ளி, பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு S-1 விசாவும்; PhD ஆராய்ச்சி மாணவர்கள், வருகை தரும் பேராசிரியர்கள் மற்றும் இன்டர்ன்ஷிப் மாணவர்களுக்கு S-2 விசாவும் என இரு பிரிவுகளாகச் சுருக்கப்பட்டுள்ளன.
'Study in India' தளம் மூலம் சேரும் மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை e-S1 விசா கிடைக்கும்.
வணிக விசா பிரிவானது B-1 மற்றும் B-2 என இரு பிரிவுகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
B-1 விசா: இந்தியாவில் தொழில் அல்லது வணிக நிறுவனங்களைத் தொடங்குவது போன்ற நீண்ட கால உரிமம் சார்ந்த வணிக நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும்.
B-2 விசா: மாநாடுகள், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், திரைப்படப் படப்பிடிப்புகள் மற்றும் குறுகிய கால ஒப்பந்தப் பணிகளுக்கு இது வழங்கப்படும்.