Page Loader
2 நாள் பயணமாக கேரளா வர இருக்கும் பிரதமர் மோடி
கேரள காவல்துறை அடுத்த இரண்டு நாட்களுக்கு கொச்சியில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

2 நாள் பயணமாக கேரளா வர இருக்கும் பிரதமர் மோடி

எழுதியவர் Sindhuja SM
Apr 24, 2023
11:07 am

செய்தி முன்னோட்டம்

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 24) கொச்சிக்கு வரவுள்ளதால், கேரள காவல்துறை அடுத்த இரண்டு நாட்களுக்கு கொச்சியில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ரோட் ஷோ, இளைஞர் மாநாடு போன்றவற்றில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார். கேரளாவின் கொச்சியில் பல்வேறு தேவாலய தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, கேரளாவில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தை ஈர்க்கும் நோக்கத்தோடு பாஜக இதை செய்ய திட்டமிட்டுள்ளது. திருச்சபையின் எட்டு பிரிவுகளின் தலைவர்கள் பிரதமரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

details

பிரதமரை சந்திக்க இருக்கும் தேவாலய தலைவர்கள் 

சீரோ மலபார் தேவாலயத்தின் பிரதான தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, மலங்கரா ஆர்த்தடாக்ஸ் தேவாலயத் தலைவர் கத்தோலிக்கஸ் பசேலியோஸ் மார்தோமா மேத்யூஸ்-III, சீரோ மலங்கரா கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவர் மேஜர் பேராயர் கர்தினால் பாஸ்லியோஸ் கிளீமிஸ் கத்தோலிக்கஸ், வேராப்போலி பேராயர் ஜோசப் காளத்திபரம்பில், மெட்ரோ காகாபிடேகோரி தேவாலயத்தின் தலைவர் ஜோசப் காளத்திபரம்பில். மார் மேத்யூ மூலக்காட், க்னானையா பெருநகர குரியாக்கோஸ் மோர் செவரியோஸ், கல்தேயன் சிரிய தேவாலயத் தலைவர் மார் அவ்கின் குரியகோஸ் ஆகியோர் பிரதமருடன் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை பிரதமர் மோடி கொச்சிக்கு வருவார். அதைத் தொடர்ந்து 1.8 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோட் ஷோ நடத்த உள்ளார். இந்த ரோட் ஷோ சேக்ரட் ஹார்ட் கல்லூரி மைதானத்தில் முடிவடையும்.