
பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்; பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலுக்கு இந்தியா தரமான பதிலடி?
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்களுக்கு விரைவான மற்றும் தீர்க்கமான பதிலடியாக, சனிக்கிழமை (மே 10) இரவு இந்தியா பதிலடி தாக்குதல்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரில் பலத்த வெடிப்புகள் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாட்டு ராணுவத்தின் டிஜிஎம்ஓ மட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச மத்தியஸ்தம் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, முன்னதாக, பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரின் அக்னூர், ரஜோரி மற்றும் ஆர்எஸ் புரா செக்டர்களில் ஷெல் தாக்குதல் நடத்தி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்கியது.
குஜராத்
குஜராத்திலும் அத்துமீறல்
குஜராத்தில் கட்ச் பகுதியிலும் பாகிஸ்தான் ட்ரோன்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. எனினும், அனைத்தையும் இந்திய பாதுகாப்புப் படைகள் உரிய பதிலடி கொடுத்துள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தானின் சரிபார்க்கப்படாத உள்ளூர் கணக்குகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் பெஷாவரில் தொடர்ச்சியான வெடிப்புகள் நடந்ததாகக் கூறுகின்றன.
இது இந்தியாவின் பதிலடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. எனினும், பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
இதற்கிடையே, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, போர் நிறுத்த மீறலை கடுமையாக கண்டித்துள்ளார்.
"இந்தியா எந்த ஆக்கிரமிப்பையும் பொறுத்துக்கொள்ளாது, மேலும் அதன் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு உரிய பதிலளிக்கும்" என்று அவர் இரவு நேர அறிக்கையில் கூறினார்.