2 மாதங்களுக்கு பிறகு கனேடியர்களுக்கான இ-விசா சேவைகளை மீண்டும் தொடங்கியது இந்தியா
ஏறக்குறைய இரண்டு மாத இடைநிறுத்தத்திற்குப் பிறகு கனடா நாட்டவர்களுக்கான மின்னணு விசா சேவைகளை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், அரசாங்க வட்டாரங்களிடம் இந்த தகவலை பெற்றதாக NDTV செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக கனேடிய அரசாங்கம் குற்றம் சாட்டியதை அடுத்து, இந்திய-கனடா உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால், செப்டம்பர் 21ஆம் தேதி விசா சேவைகள் மொத்தமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, கடந்த மாதம் வணிக, மருத்துவ விசாக்கள் உட்பட நான்கு வகையான விசா சேவைகள் மட்டும் மீண்டும் தொடங்கப்பட்டன. தற்போது சுற்றுலா விசா உட்பட நிறுத்திவைக்கப்பட்டிருந்த அனைத்து விசா சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.