இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான்: இந்தியா கூறுவது என்ன?
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை அதிகரித்து வருவதால், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று கவலை தெரிவித்துள்ளது. "உடனடியாக மோதலின் தீவிரத்தைத் தணிக்கவும், கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், வன்முறையில் இருந்து பின்வாங்கவும், இராஜதந்திரப் பாதைக்குத் திரும்பவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். வளர்ந்து வரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பிராந்தியத்தில் உள்ள எங்கள் தூதரகங்கள் இந்திய சமூகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. அந்த பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை பராமரிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது" என்று வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போர் பதட்டம் அதிகரிப்பு
சிரியாவில் உள்ள தனது தூதரக கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை இன்று நடத்தியது. ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் சேர்ந்து இஸ்ரேல் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியதால் இஸ்ரேல் மீது 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன. "ஈரான் அரசு 200 க்கும் மேற்பட்ட கொலையாளி ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் கப்பல் ஏவுகணைகளைஎங்கள் மீது ஏவியது" என்று இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவையும் வழங்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.