உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளில் இந்தியாவிற்கு 5வது இடமாம்!
செய்தி முன்னோட்டம்
உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை என காற்றின் தரம் குறித்த புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
இது இந்தியாவில் நிலவும் மோசமான காற்றின் தரத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் உலக காற்று தர அறிக்கை 2024, இந்த தரவுகளை வெளியிட்டுள்ளது.
காற்று மாசு
சற்றே அதிகரித்துள்ள காற்றின் தரம்
இந்தியா 2023 இல் மூன்றாவது இடத்தில் இருந்து 2024 இல் ஐந்தாவது இடத்திற்கு இறங்கியுள்ளது சற்றே ஆறுதல் தரும் விஷயமாகும்.
அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் நாட்டில் PM2.5 செறிவு 7 சதவீதம் குறைந்துள்ளது- இது ஒரு கன மீட்டருக்கு சராசரியாக 50.6 மைக்ரோகிராம் ஆகும்.
இது 2023 ஆம் ஆண்டில் ஒரு கன மீட்டருக்கு 54.4 மைக்ரோகிராமாக இருந்தது.
இந்த அனைத்து முன்னேற்றங்கள் இருப்பினும், உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில் ஆறு நகரங்கள் இந்தியாவில் உள்ளன.
நகரங்கள்
இந்தியாவின் மாசடைந்த நகரங்கள்
அந்த அறிக்கைப்படி, அசாமில் உள்ள பைர்னிஹாட், உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகராக டெல்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. டெல்லி தொடர்ந்து அதிக மாசு அளவைப் பதிவு செய்துள்ளது.
ஆண்டு சராசரி PM2.5 செறிவு ஒரு கன மீட்டருக்கு 91.6 மைக்ரோகிராம் ஆகும், இது 2023 இல் ஒரு கன மீட்டருக்கு 92.7 மைக்ரோகிராமில் இருந்து கிட்டத்தட்ட மாறவில்லை.
உலகின் முதல் 20 மாசுபட்ட நகரங்களில் உள்ள 13 இந்திய நகரங்கள்- அசாமில் உள்ள பைர்னிஹாட், டெல்லி, பஞ்சாபின் முல்லன்பூர், ஃபரிதாபாத், லோனி, புது டெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர் மற்றும் நொய்டா.
மற்ற நகரங்கள்
உலகில் அதிகம் மாசடைந்த மற்ற நகரங்கள்
மாசு தரவரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கையில், மற்ற நான்கு நாடுகள் சாட், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகும்.
ஒட்டுமொத்தமாக, இந்திய நகரங்களில் 35 சதவீதத்தில், வருடாந்திர PM2.5 அளவுகள், WHO வரம்பான ஒரு கன மீட்டருக்கு 5 மைக்ரோகிராம்களை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் காற்று மாசுபாடு ஒரு கடுமையான சுகாதார அபாயமாக உள்ளது. இது ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை 5.2 ஆண்டுகள் குறைகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.