Loading...
நேபாள பேரிடரில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இந்தியாவில் DNA பரிசோதனை: மத்திய அரசு நடவடிக்கை
நேபாள வெள்ளத்தில் உடல்களை அடையாளம் காண தடயவியல் ஆய்வகங்களின் சேவைகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது

நேபாள பேரிடரில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இந்தியாவில் DNA பரிசோதனை: மத்திய அரசு நடவடிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 04, 2026
10:45 am

செய்தி முன்னோட்டம்

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போனவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்கு உதவ, மத்திய மற்றும் மாநில அளவிலான தடயவியல் ஆய்வகங்களின் சேவைகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் முதல்நிலை இரத்த உறவினர்கள் தங்களது மரபணு (DNA) மாதிரிகளை வழங்கி அடையாளம் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,259 ஆக உயர்ந்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் வரை இன்னும் காணாமல் போயுள்ளனர்.

டி.என்.ஏ

DNA மாதிரிகள் சேகரிக்கும் இடங்கள்

காணாமல் போனவர்களின் தந்தை, தாய், மகன், மகள் அல்லது உடன்பிறந்தவர்கள் இந்தியாவில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகங்கள் (CFSL), மாநில தடய அறிவியல் ஆய்வகங்கள் (SFSL), தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக (NFSU) ஆய்வகங்கள் மற்றும் NABL அங்கீகாரம் பெற்ற மையங்களில் தங்களின் உயிரியல் மாதிரிகளைக் கொடுத்து டி.என்.ஏ சுயவிவரங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேபாள காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, உடல்களை ஒப்பீடு செய்து அடையாளம் காண 'Autosomal STR DNA' பரிசோதனை முறை பயன்படுத்தப்படவுள்ளது.

இது குறித்த தகவல்களுக்கு உதவி எண் (+977 9841 6160 95) வழங்கப்பட்டுள்ளது.

செயல்முறை

தகவல்களை பகிர்ந்தளிக்கும் முறை

இந்திய ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் டி.என்.ஏ தரவுகள் மற்றும் முதற்கட்ட விபரங்கள் மின் அஞ்சல் வழியாக நேபாளக் காவல்துறையின் DNA ஒப்பிட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும், காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஒருங்கிணைப்பிற்காக அதன் சிறப்பு மின்னஞ்சல் முகவரிக்கும் (eoikathmandufloodsupport@gmail.com) இதன் நகலை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசின் இந்தத் தடயவியல் உதவி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT