பாலஸ்தீன 'ஹமாஸ்' அமைப்பை இந்தியா ஏன் தடை செய்யவில்லை?
பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸை தடை செய்யும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை என்று உயர்மட்ட உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், பாலத்தீன இளைஞர்கள் பயங்கரவாதிகளாக்கப்படுவதும், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குலை இந்தியர்கள் கொண்டாடுவதும் கவலை அளிக்கக்கூடிய விஷயங்களாக இந்தியா பார்க்கிறது. உயர்மட்ட உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்த சில முக்கிய தகவல்களை நியூஸ் 18 செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதன்படி, இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை இந்தியாவில் உள்ள சில பிரிவினர் "ஜிஹாத்தின் வெற்றியாக" பார்க்கிறார்கள் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை, இந்தியா உடனடியாக கண்டித்தாலும், அந்த அமைப்பின் பெயரை வெளிப்படையாக இதுவரை இந்தியா குறிப்பிடவில்லை.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் தாக்கம்
மேலும், காசா மோதல் தொடர்பாக இந்தியா வெளியிட்ட எந்த அறிக்கைகளிலும் ஹமாஸ் அமைப்பின் பெயர் குறிப்பிடப்படவில்லை. தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இதுவரை 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ஹமாஸை இந்தியா வெளிப்படையாக கண்டித்து எதுவும் பேசவில்லை. இதற்கிடையில், இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீதான ஹமாஸின் தாக்குதல் ஆகிய இரண்டையும் பிரித்து பார்க்க தெரியாமல் பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்கள் இருப்பதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்கள், "ஹமாஸ் தாக்குதல் பாலஸ்தீனத்தின் மீது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை உணராமல், முஸ்லிம் சகோதரத்துவத்தின் வெற்றியாக இதை அவர்கள் பார்க்கிறார்கள்." என்று உளவுத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஹமாஸை இந்தியா ஏன் இதுவரை தடை செய்யவில்லை?
பொதுவாக இந்தியா பின்பற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) தடைசெய்யப்பட்ட பட்டியலில் ஹமாஸ் அமைப்பின் பெயர் இல்லாததால் தான் இந்திய அரசாங்கம் ஹமாஸை இன்னும் தடை செய்யவில்லை என்றும் உளவுத்துறை வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. மேலும், இந்தியாவில் ஹமாஸைத் தடைசெய்ய வேண்டுமென்றால், அது சட்டவிரோத நடவடிக்கைகள(தடுப்பு) சட்டத்தின்(UAPA) கீழ் தடை செய்யப்பட வேண்டும். ஆனால், இந்திய எல்லைக்குள் பயங்கரவாத ஆட்சேர்ப்பு, நிதி வழங்கல் போன்றவை நடந்தால் தான் UAPA சட்டத்தின் கீழ் ஹமாஸை தடை செய்ய முடியும். அது போன்ற எந்த விஷயமும் இதுவரை இந்தியாவிற்குள் நடைபெறவில்லை, எனவே தான் ஹமாஸ் அமைப்பை இந்தியா தடை செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.