
எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்; இந்தியாவின் கொள்கையில் மாற்றம் என தகவல்
செய்தி முன்னோட்டம்
ஒரு பெரிய கொள்கை மாற்றமாக, இந்தியாவுக்கு எதிராக எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இது தேசிய பாதுகாப்பில் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் உறுதியான நிலைப்பாட்டைக் குறிக்கிறது.
எல்லை தாண்டிய தாக்குதல்கள் மற்றும் பழிவாங்கும் தாக்குதல்களின் தொடர்ச்சியைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்த ராணுவ பதட்டங்களுக்கு மத்தியில் இந்த கொள்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, சனிக்கிழமை (மே 10) அதிகாலையில், முரித், ரஃபிகி, நூர் கான் (சக்லாலா), ரஹிம்யார், சுக்கூர் (போலாரி) மற்றும் சுனியன் உள்ளிட்ட ஆறு பாகிஸ்தான் விமான தளங்கள் மீது இந்தியா துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை
இந்த நடவடிக்கைகள் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, இந்தியா மீது அடாவடியாக தாக்குதல் தொடுக்கும் பாகிஸ்தானின் ராணுவத் திறனை நடுநிலையாக்கும் நோக்கில் செய்யப்பட்ட பதிலடி நடவடிக்கையாகும்.
பஸ்ரூர் மற்றும் சியால்கோட் விமானத் தளங்களில் உள்ள முக்கிய ரேடார் தளங்களும் அழிக்கப்பட்டன.
பாகிஸ்தான் இந்தியாவின் 26 இடங்களில் அதிவேக ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடந்தன.
இந்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தானின் தாக்குதல்கள் ஸ்ரீநகர், அவந்திபுரா மற்றும் உதம்பூர் விமான தளங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் உட்பட ராணுவ கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்டன.
பாகிஸ்தான் எல்லையில் துருப்புக்களை குவிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்தியாவின் ஆயுதப்படைகள் உயர் எச்சரிக்கையுடன் உள்ளன.