தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகளை முன் வைத்தது 'இண்டியா' கூட்டணி கட்சிகள்
தேர்தலுக்கு முன்னதாக இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இண்டியா) கட்சிகள் தங்களது ஐந்து கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் முன் வைத்துள்ளனர். இன்று டெல்லியில் நடைபெற்ற லோக்தந்த்ரா பச்சாவோ(ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்) பேரணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தங்களது கூட்டணியின் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தார். தனித்தனி பணமோசடி வழக்குகளில் அமலாக்க இயக்குனரகத்தால் (ED) கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் அடங்கும். டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) மார்ச் 21 அன்று கைது செய்தது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக திரட்டிய நிதி குறித்து விசாரிக்க கோரிக்கை
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இண்டியா கூட்டணி கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று டெல்லியில் 'லோக்தந்திர பச்சாவ்' பேரணியை நடத்தினர். தேர்தலுக்கு முன் நியாயமான முறையில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளின் நிதியை சீர்குலைக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. கூடுதலாக, ED, மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) மற்றும் வருமான வரித் துறையின் நடவடிக்கைகளை நிறுத்துமாறு பிரியங்கா வத்ரா அழைப்பு விடுத்துள்ளார். கடைசியாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக திரட்டிய நிதி குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.