Loading...
'தலைமைத் தேர்தல் ஆணையர் சிறைக்குச் செல்வார்': டெல்லி மாபெரும் பேரணியில் ராகுல் காந்தி பேச்சு
INDIA சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட பேரணி

'தலைமைத் தேர்தல் ஆணையர் சிறைக்குச் செல்வார்': டெல்லி மாபெரும் பேரணியில் ராகுல் காந்தி பேச்சு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 01, 2026
06:07 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி ராம்லீலா மைதானத்தில் INDIA சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், SIR நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி மற்றும் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் திறந்தவெளிப் பேருந்தில் பேரணியாக ராம்லீலா மைதானத்தைச் சென்றடைந்தனர்.

ராகுல் காந்தி

"ஞானேஷ் குமார் சிறைக்குச் செல்வார்": ராகுல் காந்தி

பேரணியில் பேசிய ராகுல் காந்தி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் 15 சதவீத வாக்காளர்களின் பெயர்கள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அரசியல் சாசனத்தின் ஆன்மாவைச் சிதைப்பது தேசத்துரோகச் செயல் எனவும் குற்றம் சாட்டினார்.

"தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியிலிருந்து அகற்றப்பட்டு, சிறைக்குச் செல்வார்" என்றும், இதற்காக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரும் தப்ப முடியாது எனவும் எச்சரித்தார்.

எதிர்க்கட்சிகள் வெறுப்பைப் பரப்பாது; அன்பினாலும் வன்முறையற்ற வழியிலும் அரசியல் சாசனத்தைக் காக்க தொடர்ந்து போராடும் எனக் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர்கள்

தலைவர்களின் காட்டமான உரைகள்

"தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை. மக்கள் தங்களது அரசை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, அரசே தங்களது வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகியுள்ளது. ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்" என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

"வாக்கு திருட்டு மூலம் மேற்கு வங்கத்திலும் ஜனநாயகத்தைக் குலைக்க முயன்றுள்ளனர்; அதற்கு எதிராகத் தீவிரமாகப் போராடுவோம்" என மம்தா பானர்ஜி கடுமையாகச் சாடினார்.

நிகழ்ச்சியையொட்டி ராம்லீலா மைதானப் பகுதியில் 4,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.

ADVERTISEMENT