காலநிலை மாற்றத்தால் உயரும் வெப்பநிலையால் அதிகம் பாதிகப்படவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்
காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிகமான பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடு, காடுகள் அழிப்பு என காலநிலை தொடர்ந்து மாற்றமடைந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இந்நிலையில், இதேபோல் பூமியின் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வந்தால், மனிதர்களின் உடல்நிலை எவ்வாறு பாதிப்படையும் என்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஸ்டேட் காலேஜ் மற்றும் பர்ட்யூ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள். தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பிருந்த வெப்பநிலையை விட பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியல் வரை உயர்ந்தாலே மனிதர்களின் உடல்நிலை வெகுவாக பாதிகப்படும் என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகம் பாதிப்படையும் நாடுகள்:
தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பிருந்த வெப்பநிலையை விட பூமியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தால், இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் கீழமை சாகர ஆப்பிரிக்க பகுதிகளில் வாழும் மக்கள் வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேற்கூறிய அளவு பூமி வெப்பமடையும் பட்சத்தில், ஒரு நாளில் சில மணி நேரம் மனித உடலால் தாங்க முடியாத அளவு வெப்பநிலை நீடிக்கும். இதனால் ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட உடல் நல பிரச்சினைகள் ஏற்படலாம் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி, கொல்கத்தா, ஷாங்காய், முல்தான், நாஞ்சிங் மற்றும் வூகான் ஆகிய நகரங்கள் வெப்பத்தால் அதிகமாக பாதிக்கப்படும் நகரங்களாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வெப்பநிலை 3 செல்சியஸ் வரை உயர்ந்தால்..?
பூமியின் வெப்பநிலையானது தொழிர்புரட்சி காலத்திற்கு முன்பிருந்த வெப்பநிலையை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் பட்சத்தில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் அதீத வெப்பத்தால் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயரும் இந்த வெப்பத்தால் குறைவான வருவாய் கொண்ட மக்கள் அதிகம் வாழும் நாடுகளையே அதிகம் பாதிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏனெனனில், குறைவான வருவாய் கொண்ட மக்களால் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான உபகரணங்களை வாங்கவோ அல்லது அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையிலான கட்டமைப்புகளையோ ஏற்படுத்திக் கொள்ள முடியாது. இதன் காரணமாக இந்த அதீத வெப்பத்தால் ஏழை மக்களே அதிகம் பாதிக்கப்படவிருப்பதாகவும் மேற்கூறிய ஆய்வறிக்கையின் முடிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.