ரஷ்ய-உக்ரைன் போருக்கு எதிரான புதுடெல்லி பிரகடனத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?
இன்று புது டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா முன்மொழிந்த புதுடெல்லி பிரகடனத்தை அனைத்து நாடுகளும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டுள்ளன. ரஷ்ய-உக்ரைன் போருக்கு எதிராக முன்மொழியயப்பட்ட இந்த புதுடெல்லி பிரகடனத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம். "உக்ரைனில் ஒரு விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை நிலைநாட்ட" இந்த பிரகடனத்தின் மூலம் அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எனினும், இந்த பிரகடனத்தில் எந்த இடத்திலும் ரஷ்யாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. "ஒரு பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கு சக்தியைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதை தவிர்க்க வேண்டும்." என்று ரஷ்யாவின் பெயரை குறிப்பிடாமல் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணு ஆயுத அச்சுறுத்தல்கள் அனுமதிக்க முடியாததாக கருதப்படும் என்றும் இந்த பிரகடனம் கூறியுள்ளது.
மேலும் இந்த புதுடெல்லி பிரகடனத்தில் கூறப்பட்டிருக்கும் முக்கிய வரிகள்:
இன்றைய காலகட்டம் போருக்கானது அல்ல. அனைத்து நாடுகளும் ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகளுடன் முழுமையாக ஒத்துப்போகும் வகையில் செயல்பட வேண்டும். ஐ.நா. சாசனத்திற்கு இணங்க, எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக அந்த நாட்டை கைப்பற்ற முயற்சிப்பதையும் அல்லது சக்தியை பயன்படுத்தி அச்சுறுத்த முயற்சிப்பதையும் தவிர்க்க வேண்டும். அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அணு ஆயுத அச்சுறுத்தல்கள் ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாதது. உக்ரைன் போரினால் ஏற்படும் மனித துன்பங்கள் மற்றும் எதிர்மறையான தாக்கங்களை நாங்கள் கோடிட்டு காட்டி இருக்கிறோம். உக்ரைன் போர், குறிப்பாக வளரும் மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளை கடுமையாக பாதிக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.