சிறு குற்றங்களுக்கு தண்டனையாக சமூக சேவை; நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
இந்திய தண்டனை சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவர முடிவு செய்துள்ள மத்திய அரசு, இதற்காக மூன்று முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சங்களாக எப்ஐஆர்களை மின்னணு முறையில் தாக்கல் செய்தல், விரைவான நீதியை உறுதி செய்வதற்காக காணொளி காட்சி முறையிலான விசாரணைகள் உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும், இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, இந்தியாவில் முதல்முறையாக சிறு திருட்டு, அவதூறு உள்ளிட்ட சிறிய அளவிலான குற்றங்களுக்கு மாற்று தண்டனையாக சமூக சேவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகளில் நான்கில் மூன்று பங்கு விசாரணைக் கைதிகளாக இருப்பதால், சமூக சேவையை தண்டனையாக வழங்கி முதல் முறை குற்றவாளிகளையும், சிறிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்களையும் சிறையிலிருந்து விடுவிக்க முடியும்.
சமூக சேவையை தண்டனையாக வழங்கும் மேற்குலக நாடுகள்
சமூக சேவை இதுவரை இந்திய நீதித்துறையில் ஒரு பகுதியாக இல்லை என்றாலும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உட்பட சில மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக உள்ளது. இங்கிலாந்தில், சமூக சேவையானது சமூகத்திற்கு திருப்பிச் செலுத்துதல் என்று குறிப்பிடப்படுகிறது மற்றும் அந்நாட்டு நீதி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தின் நீதி அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, 2019ஆம் ஆண்டில் மட்டும் இது தொடர்பான 80,039 உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அமெரிக்காவில், 1960களில் கலிபோர்னியாவில் தண்டனையின் ஒரு வடிவமாக சமூக சேவை தொடங்கி, பின்னர் நாடு முழுவதும் பரவியது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த குற்றவியல் நீதி நிர்வாக அமைப்பு மற்றும் சமூக அடிப்படையிலான திருத்தங்கள் என்று பிரபலமாக அறியப்படும் சமூக சேவை திட்டங்களைக் கொண்டுள்ளது.