
இரு தினங்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை தொடரும் வாய்ப்பு; ஒருசில இடங்களில் வெப்பநிலை 4 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும்
செய்தி முன்னோட்டம்
வரும் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மித மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், வெப்பமண்டல நிலைமை காரணமாக, இன்றும் நாளையும் மாநிலத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சாதாரணத்தைக் காட்டிலும் 4 டிகிரி செல்ஷியசுக்கு அதிகமாக இருக்கலாம் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியசாக இருக்கலாம்.
விவரங்கள்
தமிழகத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்
நேற்று மாலை நிலவரப்படி, கரூர் பரமத்தி மற்றும் வேலூரில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் (சுமார் 40 டிகிரி செல்ஷியஸ்) வெப்பம் பதிவானது.
பின்னர், மதுரை விமான நிலையம் மற்றும் திருச்சியில் 103 டிகிரி பாரன்ஹீட் (சுமார் 39.5 டிகிரி செல்ஷியஸ்) வரை வெப்பம் எட்டியது.
மேலும், சென்னை மீனம்பாக்கம், தர்மபுரி, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர் மற்றும் திருத்தணியில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் (38 டிகிரி செல்ஷியஸ்) வெப்பம் பதிவாகி, பொதுமக்களை வாட்டியிருக்கிறது.