5 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து வட இந்திய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இந்த மாநிலங்களின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. வட இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் வலுவான மேற்குத் தொந்தரவுகளின் காரணமாக, ஹிமாச்சலில் ஆலங்கட்டி புயல் மற்றும் மழை பெய்து வருகிறது. ஏப்ரல் மாதம் பெய்த மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் இந்தியாவின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சராசரிக்கும் குறைவாகவே உள்ளது.
கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
இரண்டு மேற்கத்திய இடையூறுகள், ஹரியானா மற்றும் அதன் அண்டை நாடான தெற்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சி மற்றும் ராஜஸ்தானின் வடமேற்கில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சி ஆகியவை வெப்பநிலை குறைவதற்கு மிக பெரும் காரணமாக இருந்தது. மேலும், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, திருச்சூர் மற்றும் இடுக்கி ஆகிய நான்கு கேரள மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. "காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளோம். அதேபோல், கிழக்குப் பகுதியில் உள்ள, பீகார், ஜார்கண்ட் மற்றும் தெற்கு கர்நாடகா உள்பகுதியில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது." என்று வானிலை ஆய்வாளர் நரேஷ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.